For Read Your Language click Translate

11 July 2014

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்



     இருபத்தேழு  நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவது இடத்தை பெறுவது பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகியவை தொடர் எழுத்துக்கள் கொ, கௌ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் மனதில் ஏதோவொரு சோகம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள். இந்த நட்சத்தரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர் புகழை எளிதில் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். மற்றவர்களுக்கு சவாலாக விளங்கும் விஷயங்கள் இவர்களை பொறுத்த வரை மிகவும் எளிமையானதாக இருக்கும். நன்னெறிவும் ஒழக்கமும் தவறாதவர்கள். தயவு தாட்சண்யம் பார்பத்திலும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் விரும்தோம்பலிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள். சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்றாலும் சட்டென முன் கோபம் வந்து கெடுத்து விடும். சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் தன்னம்பிக்கையும் தளராத தைரியமும் கொண்டு பூஜ்ஜியத்திலிருந்தாலும் ராஜ்ஜியத்தை பிடிப்பார்கள். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

குடும்பம்;

     காதலில் தோல்வியுற்றவராக இருந்தாலும் வரும் வாழ்க்கையிடம் இன்புறவே நடந்து கொள்வார்கள். காம வேட்கை அதிக மிருந்தாலும் பரிசுத்தமானவர்கள். தாத்தா பாட்டி, தாய் தந்தை, மனைவி பிள்ளைகள், பேரன் பேத்திகள் என கூட்டு குடும்பமாக கும்பலில் வாழவே விரும்புவார்கள். குடும்பத்தில் எந்தவொரு விஷேசம் என்றாலும் அது தன்னால் தான் நடந்தாக பெருமைபட்டு கொள்வார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். புதுமை விரும்பிகள் என்பதால் குடும்பத்திற்கு தேவையான சின்ன சின்ன பொருட்களை கூட பார்த்து பார்த்து வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்கள் செய்த உதவிகளை மறக்காமல்  தக்க சமயத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். குடும்ப தலைவன் என்ற பொறுப்பை விட்டு கொடுக்க மாட்டார்கள். பசியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது  என்றாலும் அமிர்தமென்றாலும், விஷயமென்றாலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தே உண்பார்கள். நண்பர்களுக்கு எதிலும் முன்னுரிமை கொடுப்பார்கள்.

தொழில்;

     பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை கவிதை கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும்.  இளமை வாழ்வில் பல போராட்டாங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் உண்டு. சினிமா துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பலவகையில் புகழ் பெறுவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் எவ்வளவு சாதித்தாலும் சம்பாதித்தாலும் தன்னடக்கத்துடனேயே இருப்பார்கள். இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, கடலில் எண்ணெய் ஆய்வு செய்யும் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டு நிறைய சம்பாதிப்பார்கள்.

நோய்கள்;

     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காச நோய், ரத்த சோகை, மார்க புற்று நோய், தோல் வியாதி, மஞ்சள் காமாலை விக்கல், இருமல் போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.

திசை பலன்கள்;

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சனி திசை வரும். சனி திசை மொத்தம் 19 வருடங்களாகும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும் என்பதினை அறியலாம். சனி திசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களிடையே கருத்து  வேறுபாடுகள், கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் நல்லது அடைய முடியும்.

இரண்டாவதாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்தப் பலன்களை பெற முடியும்.

முன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

நான்காவதாக வரும் சுக்கிர திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவை யாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.

சூரிய திசையும், சந்திர திசையும் ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். சமுதாயத்தில் ஒர் உயர்வான நிலையிலேயே இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

பூச நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அரச மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணியளவில் வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
   
மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

திருச்சேறை;
      கும்பகோணம், திருவாரூர் சாலையில் 15.கி.மீ தெலைவில் அமைந்துள்ள சாரநாகத பெருமாள் மற்றும் காவிரித்தாய் வீற்றிருக்கும் திருஸ்தலம்

ஒழுந்தியாப்பட்டு;

     திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வழயில் உள்ள அரசிலி நாதர் பெரிய நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

கோனேரி ராஜபுரம்;
      கும்பகோணம்& காரைக்கால் சாலையில் எஸ் புதூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள உமாமகேஸ்வரர் மங்களாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்

திருச்சி;
     விருதுநகர் அருப்பு கோட்டைக்கு தென் மேற்கில் உள்ள திருமேனி நாதர் துனை மாலை நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

      மேற்கூறிய கோயில்களின் ஸ்தல விருட்சம் அரசமரமாகும் ஆதலால் இக்கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடைய முடியும்

குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூரில் நடைபெறும் தைபூசத் திருவிழாவில் பங்கு கொண்டு வழிபாடு செய்வது சிறப்பு

கூற வேண்டிய மந்திரம்
   
ஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

பூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

No comments:

Post a Comment