இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவது இடத்தை பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தொண்டை, தோள், கைகள் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,க,ங,ச ஆகியவை தொடர் எழுத்துக்கள் கூ, கா ஆகியவை. இவர் மிதுன ராசிக்குரியவராவார்.
குண அமைப்பு;
திரு என்ற அடைமொழியை கொண்டிருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால் முன் கோபமும் முரட்டு தனமும் அதிகமிருக்கும். காரிய வாதியாக திகழும் இவர்கள் தங்களுடைய நன்மைக்காக பொய் சொல்லவும் தயங்கமாட்டார்கள். உற்றார் உறவினர்களை அடிக்கடி பகைத்து கொள்ள நேரிடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல பேசுவதால் இவர்களை இரட்டை நாக்குள்ளவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும், எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விடாத பிடிவாத குணமும் நிரம்பியிருக்கும். தங்களைப் பற்றியே எந்த நேரமும் புகழ் பாடி கொண்டிருக்கும் தற்பெருமை கொண்டவர்கள். தேவையற்ற வாக்கு வாதங்களால் நண்பர்களை இழக்க கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க நேரிடும். பிறரை பற்றி இழிவாக பேசுவதில் வல்லவர்கள். காம வேட்கை அதிகமுள்ளவர்களாக இருப்பதால் பெண்களின் சாபத்திற்கு ஆளாவார்கள்.
குடும்பம்;
கண்டதை கவிதையாக்கும் கற்பனை வளம் கொண்டவர்களாதலால் காதலும் இவர்களுக்கு கைவந்த கலையே. மனைவி பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள். வாழ்க்கையை ரசித்து, ருசித்து இன்பமாக வாழ்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்று கொள்ள முடியும். வீடு மனை வண்டி வாகனங்களுடன் சுக போக வாழ்க்கை அமையும். உறவினர்களை விட நண்பர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரம் அதிகமுள்ள உணவுகளை விரும்பி உண்பார்கள்.
தொழில்;
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவாற்றலும் திறமையும் இருக்கும் ஆதலால் புகழ் பெற்ற நிறுவனங்களில் பொருட்களை விற்று சம்பாதிப்பதில் வல்லவர்கள். அரசு பணியோ, தனியார் துறையோ எதுவாக இருந்தாலும் தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவதுடன் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலைக்கு வருவார்கள். வீடு நிலம் வாங்க விற்க உதவும் தரகர்களாகவும், மக்கள் தொடர்பு, காவல் சுற்றுலா, தொலைபேசி,கனரக வாகனங்களில் பணிபுரியும் வாய்ப்பு, வண்டி வாகனங்களை வாங்கி விற்பது, ஹார்வேர் பொருட்களை விற்பனை செய்வது போன்ற துறைகளில் ஈடுபடுவார்கள். நட்சத்திர ஒட்டல் நடத்துவது, பலர் மடாதிபதிகளாகவும், பள்ளி கல்லூரி மேலாளர்களாகவும் விளங்குவார்கள் 39 வயதிற்கு மேல் சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று செல்வம் செல்வாக்குடனும், சமுதாயத்தில் நல்ல உயர்வுடனும் வாழ்வார்கள்.
நோய்கள்;
தொண்டையில் பிரச்சனை, அம்மை ஆஸ்மா, இருமல், ரத்த அழுத்த சம்மந்த பட்ட பிரச்சனைகள், மர்ம உறுப்புகளில் பிரச்சனை போன்றவை உண்டாகும்.
திசை பலன்கள்;
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு கணக்கிட்டு மீதம் வரும் திசா காலங்களைப் பற்றி அறியலாம். ராகு திசை காலங்களில் பிடிவாதம், முன்கோபம், தந்தையிடம் கருத்து வேறுபாடு, பெரியோர்களை மதிக்காத குணம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை, கல்வியில் மந்த நிலை போன்றவை ஏற்பட்டாலும் ராகு பலம் பெற்றிருந்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்களை அடைய முடியும்.
இரண்டாவதாக வரும் குருதிசை காலங்களில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அறிவாற்றலை மென் மேலும் பெருக்கி கொள்ள கூடிய ஆற்றல் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு எதிர்பாராத திடீர் தன வரவுகளால் பொருளாதார மேன்மைகள் உண்டாகும்.
மூன்றாவதாக வரும் சனி திசையிலும் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் எதிலும் முன்னேற்றமும், வேலையாட்களின் ஒத்துழைப்பும் கிட்டும். சனி பலமிழந்திருந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
நான்காவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களிலும் நல்ல மேன்மைகள், அசையும் அசையா சொத்து சேர்க்கைகள், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடை பெறும் வாய்ப்பு உண்டாகும்.
ஐந்தாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். இக்காலங்களில் நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. இல்வாழ்வில் ஈடுபாடு குறையும் ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் ஏற்படும்.
திருவாதிரை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் செங்கரு மரமாகும். இம்மரத்தை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதம் இரவு பத்து மணிக்கு மேல் வானத்தில் பிரகாசமாக ஜொலிப்பதை காணலாம்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;
திருவாதிரை நட்சத்திரத்தில் தெய்வ பிரதிஷ்டை செய்வது, மந்திரங்கள் ஜெபிப்பது, வேத பரிகாரங்கள் செய்வது, நீண்ட நாட்களாக பூட்டியுள்ள கதவுகளை திறப்பது, சூளைக்கு நெருப்பிடுவது, குழந்தையை தொட்டியிலிருந்து காது குத்துவது போன்ற காரியங்களை செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்;
திருவாதிரை நட்சத்திர காரர்கள் ஆடலரசன் அருள்பாலிக்கு எந்த திருத்தலங்களையும் வழிபடலாம். திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ அருணாசலேஸ்வரரையும் வழிபாடு செய்யலாம். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீயோக பைரவரையும் வழிபடலாம் சென்னை திருவற்றியூரிலுள்ள ஸ்ரீ வடிவுடையம்மை, உடனுறை ஸ்ரீபடம் பக்க நாதர் மற்றும் மாணிக்க தியாகேஸ்வரரையும் வழிபடலாம். சென்னை பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலக்ஷமி கோயிலுள்ள 27 நட்சத்திர விருட்சங்களில் செங்காலி மரத்தையும் வழிபடலாம்.
கூற வேண்டிய மந்திரம்;
ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர, பிரசோதயாத்
திருவாதிரை நட்சத்திர காரர்களுக்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்;
ரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.
No comments:
Post a Comment