For Read Your Language click Translate

22 January 2017

ஐப்பசி மாதம் -கார்த்திகை மாதம்- தீப மாதம்


ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா இராசியில் நீச்சம், கார்த்திகை மாதத்தில் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் எனவே தான் அக்னி ரூபமான உண்ணாமுலையம்மை உமையாளுடன் உடனாகிய அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவ பெருமானின் ஐந்து முகங்களான சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம் இவற்றுடன் கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் ஆறு முகங்களின் நெற்றிக்க்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை 'அக்னி'. கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கிருத்திகை நட்சத்திரம் முதலாவதாக கூறப்படுள்ளது.
இந்த கார்த்திகைப் மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி இனைந்த அந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம். கிருத யுகத்தில், மலையரசன் தன் பொற்பாவை உமையம்மையுடன் பரமேஸ்வரன் "திருக்கயிலையில்" அக்னி ரூபமாகத்தான் மகரிஷிகளுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்ததாகவும், உமா மஹேஸ்வரர்களின் உண்மையான திவ்ய தரிசனத்தைக் காண்பதற்காக , அம்மாமுனிவர்கள் கடும் தவமியற்றியதாகவும், அப்போது அவர்கள் தவத்திற்காகப் பிரம்மதேவரால் தனது மனதிலிருந்து படைக்கப்பட்டதே மானசரோவரம் என்னும் தெய்வீகத்தடாகம் என்றும் புராண நூல்கள் கூறுகின்றன.
காஞ்சி வரதராஜப் பெருமாளும் பிரம்ம தேவர் இயற்றிய அஸ்வமேத வேள்வியின் அக்னியிலிருந்து தோன்றியவர்தான். பகவான் ஸ்ரீமந்நாராயணின் பத்து அவதாரங்களில் அளவற்ற வீரியம் கொண்ட ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த மாதமும் கார்த்திகையே. எனவேதான் சோளிங்கரில் எழுந்தருளியுள்ள யோக நரசிம்மரை கார்த்திகை ஞாயிறன்று வழிபட அந்த ஸ்ரீ நரசிம்மன் கேட்டவற்றை எல்லாம் பக்தர்களுக்குத் தந்தருள் புரிவான் என்பது காலம் காலமாக கண்டுவரும் அனுபவமாகும்.
இவை தவிர நாம் புண்ணிய காலங்களிலும், திதி தினங்களிலும் செய்யும் பித்ரு பூஜையின் பலனைப் பித்ரு தேவதைகளின் மூலமாக, நமது முன்னோர்களிடம் சேர்ப்பிப்பவரும் அக்னிதேவரே ஆவார், ஆதலால் தான் கார்த்திகை மாதத்தில், தினமும் அக்னியை மானசீகமாக பூஜித்து, வீடுகளில் விடியற்காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வரும்படி மகரிஷிகள் அருளியிருக்கின்றனர், முக்கியமாக பரணி தீப தினம் அன்றும், கார்த்திகை தீபம் அன்றும் நம் இல்லங்களில் மாலையில் தீபங்கள் ஏற்றி வைத்து, இறைவனை வழிபட வேண்டும், இது மட்டுமன்றி, அவரவர் ஊர்களிலுள்ள திருக்கோவில்களிலும் தங்கள் கையினால் தீபம் எற்றி வைப்பது அவசியமாகும்.
இவ்வாறு கார்த்திகை மாதம் அக்னியின் மாதமாகும். நெருப்புக்கோள் (அக்னி கிரகம்) செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில், மற்றொரு நெருப்புக் கோளான சூரியன் சஞ்சரிக்கும் காலமே, விருச்சிக மாதம் எனப் புராதான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள. விருச்சிக மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி இனைந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம், அந்த கார்த்திகை மாதத்தில் திங்கட் கிழமைகளில் சோம வார விரதமும் இருக்கின்றோம்.
இவ்வாறு இந்த கார்த்திகை(விருச்சிக) மாதத்தில் இரண்டு விரதங்கள் வருகின்றன அவையாவன கார்த்திகை சோம வார விரதம் மற்றும் கார்த்திகை பௌர்ணமி உமா மகேஸ்வர விரதம் ஆகும். அவற்றுள் முதலில் கார்த்திகை சோம வார விரதத்தைப் பற்றிப் பார்ப்போம்.
சோமவார விரதம் தோன்றிய வரலாறு:
சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான். தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித் தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான , கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் உனது அழகில் கர்வம் கொண்டுதானே நீ என் மற்ற பெண்களை அவமதித்தாய் எனவே நீ உனது அழகை இழந்து குஷ்ட ரோகியாகக் கடவது என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார் அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம் எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.
இவ்வாறு சந்திரன், சோம வார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் சடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான். இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய எம்பெருமான் சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சசிதரர், சோம சுந்தரர், சசி மௌலீஸ்வரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிசேகரர், சந்திர சூடர், மதி சூடிய மைந்தர் என்று பலவாறாகப் புகழப்பட்டார். இந்த கார்த்திகை விரதம் சோமன் என்னும் சந்திரனின் பெயரால் (உமையம்மையுடன் கூடிய சிவபெருமானின் ஒரு நாமமும் சோமன்) சோமவார விரதம் என்று வழங்கப்படலாயிற்று.
கார்த்திகை விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருள வேண்டும் என்று சந்திரன் வேண்ட அவ்வாறே அருள் பாலித்தருளினார் ஐயனும். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் ஆகும். இங்கு தான் சோமனாகிய சந்திரன் சோமனாகிய எம்பெருமானுக்காக சோம வார விரதம் இருந்து அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.
சோமவார விரதத்தின் மகிமை:
வசிஷ்டர் கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்து கற்புக்கரசி அருந்ததியை இல்லாளாக அடைந்தார். இந்த சோமவாரத்தன்று விரதம் இருந்து பலன் பெற்ற ஒரு புராண வரலாறு. சந்திர வர்மன் என்ற மகனுக்கு அழகிய ஒரு பெண் மகவு பிறந்தது. அவளுக்கு சீமந்தினி என்று நாமம் சூட்டப்பட்டது. அவளது ஜாதகத்தை கணித்தவர்கள் அவள் சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து விடும் துர்பாக்கியம் கொண்டவள் என்று கூறினார்கள். அதனால் மன்னன் மிகவும் துக்கம் கொண்டு பல்வேறு முனிவர்களை கலந்தாலோசித்தான். யாக்யவல்லியர் என்ற முனிவர் அவளை முறையாக கார்த்திகை சோம வார விரதத்தை கடைப்பிடிக்க ஆலோசனை அருளினார், அவளும் கார்த்திகை சோமவாரம் தோறும் அதிகாலையிலேயே எழுந்து உடல் சுத்தி செய்து மந்ததிரமாகும் பால் வெண்ணீராடி , நாள் முழுதும் “ஓம் நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஜபித்து உபவாசம் இருந்து மாலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டு வரலானாள். அவள் பருவம் அடைந்தவுடன் அவளூக்கு நளமஹாராஜாவின் பௌத்ரனான இந்திரசேனனின் மகன் சந்திராங்கதனுடன் விவாகம் நடந்தேறியது. ஒரு சமயம் அவர்கள் யமுனை நதியில் நீராடும் போது நீர் சுழலில் சிக்கி அவன் மூழ்க நேர்ந்தது, ஆயினும் சீமந்தினி அனுசரித்த சோம வார விரதத்தின் பலனால் அவனை நாக கன்னியர் காப்பாற்றி சென்றனர்.பின்னர் இறையருளால் அவன் பாதாள லோகம் விடுத்து மீண்டும் பூலோகம் வந்து தன் மனைவியுடன் இனைந்தான். சீமந்தினியும் வெகு காலம் பின் தனது கணவனுடன் சோமவார விரதம் அனுஷ்டித்து வரலானாள். இவ்வாறு நம் தலைவிதியையும் மாற்றும் வல்லமை கொண்டது இந்த சோமவார விரதம். கைலாயப் பேறு அளிக்கும் விரதமிது. இவ்விரதத்தை முறையோடு கடைப்பிடிப்பவர்கள் இந்த பிறவி இறப்பென்னும் சாகரத்திலிருந்து முக்தி அடைந்து எம்பெருமானுக்கு கைலாயத்திலே சென்று பணி செய்யும் பேறு பெறுவர்.
கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை:
இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறை ஸ்கந்த புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் துயில் எழுந்து உடல் சுத்தம் செய்து , பஞ்சாட்சர மந்திரம் ஓதி உடல் முழுவதும் வெண்ணீராடி, சந்தியாவந்தனம் முடித்து , பரம கருணாமூர்த்தியை, சங்கரனை, சம்புவை, அம்பலத்தரசை, கங்காதரரை, உமாபதியை மனதில் எந்நேரமும் தியானித்து, சிவபெருமானின் அடியவர்களான ஒரு தம்பதியரை சிவ-சக்தியாக பாவித்து பாத பூஜை செய்து வணங்கி, அவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும். விரதம் இருப்பவர் நாளின் ஒரு நேரம் மட்டுமே எளிய உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய முடியாதவர்கள் திருக்கோவிலுக்கு சென்று உமா-மஹேஸ்வரரை வழிபட்டு, பஞ்சாமிர்தம் முதலிய இனிய பொருட்களால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து, வில்வ தளங்களால் எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்து, சிறந்த அமுதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து அந்த பிரசாதத்தை சிவனடியார்களுக்கு வழங்கி தாங்களும் அந்த பிரசாதத்தை உண்ணலாம். இந்த விரதத்தை முறையாக, தூய மனத்துடன் கடைப்பிடிப்பவர்கள், இந்த மண்ணுலகில் எல்லா செல்வங்களையும் அடைந்து அனுபவித்து இறுதியாக கைலாயப் பதவியும் அடைவர்.
கார்த்திகை சோமவார ஆலய வழிபாடுகள்:
இனி தற்போது கார்த்திகை சோமவாரத்தன்று எம்பெருமானுக்கு மணிவளர் கண்டருக்கு, இலை புனல் வேலருக்கு, செஞ்சுடர் வண்ணருக்கு, சாந்தணி மார்வருக்கு, ஏறது ஏறியவருக்கு, சங்கொளி வண்ணருக்கு பூணொடு மார்பருக்கு எந்தெந்த சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது என்பதை பார்ப்போம். கார்த்திகை சோமவாரத்தன்று சகல சிவாலயங்களிலும் சந்திரனாம் சோமனுக்கு அருள் புரிந்து தட்சன் சாபம் போக்கி பிறை சந்திரனை ஜடா முடியில் அணிந்த சந்திர சேகரராம் லிங்க மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூசனைகள் நடை பெறுகின்றன. பல் வேறு ஆலயங்களிலும் பல் வேறு வகைகளில் வழிபாடு நடை பெறுகின்றது. பெரும்பாலான ஆலயங்களில் 108 சங்காபிஷேகமும் சில விசேஷ தலங்களில் 1008 சங்காபிஷேகமும் நடை பெறுகின்றது. திருநெல்வேலியிலே நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி தந்தருளுகின்றார்.
பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங் காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்க நான் மறையவர் நிறைதீர அரிவையர் ஆடல் பேணத்
திங்கள் நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர் தாமே.
கார்த்திகை மாதம் தீப மாதம் என்பதால் பல ஆலயங்களில் 1008, இலட்சம் என விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சென்னை பூந்தமல்லியிலுள்ள ஒத்தாண்டீஸ்வரர் ஆலயத்தில் மூன்றாவது வாரம் இலட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகின்றது.. சங்காபிஷேகம் இல்லாத சில ஆலயங்களில் சம்போ சங்கர உமாபதிக்கு, சாம்ப சுந்தர பசுபதிக்கு, நந்தி வாகனனருக்கு, நாக பூஷணருக்கு, சந்திர சேகரருக்கு சிறப்பு அலங்காரங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
thank you:Vegetarian சைவம்

No comments:

Post a Comment