சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்! காலக் கணிதத்தின் சூத்திரம்
கர்க்கடக ராசி லக்னமாகவோ, சந்திரன் இருக்கும் ராசியாகவோ அமைந்து, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருப்பாள். ஓவியங்களின் வாயிலாக தனது சிந்தனையை வடிவமைப்பவளாக இருப்பாள். எண்ணத்தில் இருக்கும் தத்துவ விளக்கத்தை, ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவதில் திறமை அதிகமாகக் காணப்படும் என்கிறார் வராஹமிஹிரர் (சில்பினீ).
பக்தி, பணிவு, உற்றார், உறவினர், புத்தி, யுக்தி, கணிதம், வேதாந்தம், அறிவு, வார்த்தைகள், தேவதைகளை உபாசனை செய்வதில் ஆர்வம், உண்மை உரைத்தல், சிற்பக்கலை, இளவரசர், நண்பர்கள், மருமகன் (அக்கா-தங்கைகளின் புதல்வன்) படித்தவர்களின் பாராட்டு, விஷ்ணுபரமான செயல்பாடுகள், கதை, கட்டுரை, விமர்சனம், எடுத்துக்காட்டு, கட்டுரையின் தர நிர்ணயம், நகைச்சுவை, மருத்துவம், அமைதி ஆகிய விஷயங்களை புதனை வைத்து இறுதி செய்வார்கள். இவற்றில் சிற்பக்கலையில்… புதன் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் தனித்திறமை பெற்றிருப்பாள் என்பதை விளக்குகிறது ‘சில்பினீ’ என்ற செய்யுள்.
அறிவும்… ஆர்வமும்!
அறிவுபூர்வமான விஷயங்களில் ஆர்வம் அதிகமாகி, தத்துவ விளக்கங்களில் பல கண்ணோட்டங்களை விளக்கி, உள்ளதை உள்ளபடி விவரிக்கும் திறமையை புதன் அளிப்பான். அவளுக்கு அந்தத் திறமை இருப்பதை புதன் சுட்டிக்காட்டுகிறான் என்றும் சொல்லலாம் (க்ரஹா: ஸுசயந்தி). ஆழமாக ஆராயும் அறிவுக் கூர்மையை மறை முகமாகச் சொல்கிறது ‘சில்பினீ’ என்ற சொல். சிற்பத்தில் உயிரோட்டத்தை ஏற்படுத்தி துல்லியமான ‘பாவ’த்தை வெளிக்கொண்டு வருவதற்கு அறிவுக் கூர்மை அவசியம். இப்படியும் சொல்லலாம்… ஜடப் பொருளை சைதன்யப் பொருளாக மற்றவர்கள் உணரும் படி செய்வது என்பது, தனித் திறமையால் வரவேண்டிய ஒன்று. ஆராயும் திறமை இருப்பதால் உண்மையை ஏற்பதும், பொய்யை விலக்குவதும் சுலபமாகிவிடும். செம்மையான தாம்பத்திய வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான ‘விவேகம்’ அதாவது பகுத்து அறிதல் இருப்பதை, ‘சில்பினீ’ என்ற சொல் விளக்குகிறது.
அனசூயை, நளாயினி, குந்தி, சாவித்ரி, சீதை போன்றவர்கள் அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியில் திறமையை எட்டியவர்கள். ‘பதிவிரதை’ என்ற சொல்லுக்கு, ‘கணவனுக்கு அடிமை’ என்று பொருள் கொள்ளக்கூடாது. கணவன் சொல்லுக்கு செவி சாய்த்து, அதை ஆராய்ந்து தத்துவ விளக்கத்தை உணருபவள் அவள். திரௌபதி சபையில் வாதம் செய்ததும், அனசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகள் ஆக்கியதும், ஸ்ரீராமனுக்கும் அவருடைய புதல்வர்களான லவ – குசர்களுக்கும் இடையேயான மோதலை சீதை முடிவுக்குக் கொண்டு வந்ததும், சாவித்ரி யமனோடு வாதாடியதும் அவர்களுடைய சிந்தனை வளத்துக்கு எடுத்துக்காட்டு.
புராணம் காட்டும் பதிவிரதைகள்
இவர்கள், சிற்றின்பத்தின் ஈடுபாட் டில் வரையறையுடன் இருப்பதில் இருந்து நழுவாத மனப்போக்கை உடையவர்கள். அவர்களுடைய சிந்தனை வளம் குன்றாமல் இருக்க… கணவனைத் தவிர மற்றவர்களுடன் சிற்றின்பத்தை பங்குபோடாதவர்கள். சிற்றின்பத்தில் ‘தாதுஷயம்’ (அதாவது பீஜம், சோணிதம் ஆகிய இரண்டும் தாதுகீகள். அதன் ஷயம்- குறைவுபடுதல்) ஏற்பட்டால் சிந்தனை வளம் குன்றிவிடும். ஆனால், நாம் எடுத்துக்காட்டியது போன்ற மாதரசிகள் முனிவர்கள் போல், தங்களது சிந்தனை வளத்தால் எதிரிகளை வென்றுவிடுவார்கள். அந்தத் திறமையை வளர்த்தது ‘பதிவிரதை’ என்கிற தகுதி. அது புத த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளில் தென்படும்.
கிளிப்பிள்ளை போன்று கணவன் சொன்னதை அடிமை போல் அனுசரிப் பதை, ‘பதிவ்ரதை’ என்று சொல்ல இயலாது. தனது சிந்தனையில் தெளிவு ஏற்பட்டு, கணவன் சொல்லுக்கு மதிப்பு அளிப்பவள் அவள். விவேகம் இருக்கும் இடத்தில்தான் அதைக் காண இயலும். அப்படியான விவேகத்தின் அளவை, புதனை வைத்து வரையறுக்கவேண்டும்.
புத யோகம்… சந்திர கிரகணம்!
‘சந்திரனைப் பிடிக்க முற்படும் கேதுவுக்கு (சந்திர க்ரஹணம்) புத யோகம் வந்தால், கேது முயற்சியில் இருந்து நழுவுவான்; க்ரஹணம் நிகழாது’ என்று முத்ராராக்ஷஸ நாடகத்தில் விசாகதத்தன் கூறுவான் (க்ரூரக்ரஹ: ஸகேது: சந்திரமஸம் பூர்ணமண்டல மிதானீம் அபிபவிது மிச்சதி பலாத் ரஷத்யேனம்து புதயோக:). ‘கிரகணத்தின் பிடியிலிருந்து சந்திரனை விடுவிக்கிறான் புதன்’ என்று விளக்கம் அளிப்பார்கள். ஆபத்திலிருந்து வெளிவருவதற்கு ஏற்ப சிந்தனை வளம் செயல்படும் என்பதை மறைமுகமாக புத யோகம் (புதனின் சேர்க்கை) விளக்குகிறது.
மும்மூர்த்திகளின் விருந்துக்கு ஏற்பாடு செய்தாள் அனசூயை. அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். அதாவது, ‘எங்களுக்கு உடையைக் களைந்து ‘நக்னமாக’ உணவு பரிமாற வேண்டும்’ என்றனர். சிந்தனை வளம் பெற்ற அனசூயை, மூவரையும் குழந்தைகளாக மாற்றினாள்; ஆபத்திலிருந்து வெளிவந்தாள். பெண்மையை ரசிக்கும் திறன் குழந்தைக்கு இருக்காது. சாவித்ரியும் சிந்தனை வளத்தால் வென்றாள். இதுபோன்ற திறமைகளை புத யோகம் அளிக்கும். புத த்ரிம்சாம்சகம் அவளை சிந்தனைச் சிற்பியாகக் காட்டித் தந்தது.
புதனுக்கும் ‘மௌட்யம்’ உண்டு!
த்ரிம்சாம்சகம் அல்லாத தொடர்புகள், பல நல்ல இயல்புகளை வெளிப்படுத்தும். புதனுக்கும் ‘மௌட்யம்’ வரும். மௌட்யம் என்றால் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்தனை செயல்படாமல் இருப்பது என்று சொல்லலாம். சிந்தனை வளம் அற்றவளையும் அப்படிச் சொல்லலாம். பிறப்பில் மௌட்யம் இருந்தால் சிந்தனை வளம் பெறாதவள். சூரிய சேர்க்கையில் ‘மௌட்யம்’ வந்தால், சிந்தனை வளம் செயல்படாமல் போய்விடும். தனது தகுதியை இழந்துவிடுவாள். பாபக் கிரகச் சேர்க்கையில் சிந்தனை வளம் குன்றாது; விபரீத சிந்தனையில் துயரத்தைச் சந்திக்கவைக்கும். மௌட்யத்தில் இருந்து வெளிவந்தால் நல்ல சிந்தனை திரும்பவும் வளரும். சத்ரு வீட்டில் அமைந்த புதன், 6, 8, 12-க்கு அதிபதியாக இருக்கும் புதன், அஸ்தமனமான புதன், பாப யோகத்தில் இருக்கும் புதன்… இந்த இடங்களில் எல்லாம் மாறுபட்ட பலனை அளிப்பதில் சிந்தனை திரும்பிவிடும். உச்ச புதன், நீசபங்கம் அடைந்த புதன், கேந்திரகோணாதிபத்யம் உள்ள புதன்… இவை அத்தனையும் சுய சிந்தனையை விருத்தி செய்து, பல நன்மைகளை வாரி வழங்கும் தகுதியைப் பெறும்.
புதனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. 4-வது கேந்திரத்தில் மகிழ்ச்சியைக் கெடுப்பான். சூரியனுக்கு முன்னும் பின்னுமாக அதிக இடைவெளியில்லாமல் பயணிப்பான் புதன். சூரியனின் நெருக்கத்தில் அடிக்கடி அஸ்தமனத்தை ஏற்கவேண்டியது வரும். ஆனால், அவன் சேர்க்கையில் புதனுக்கு நிபுண யோகம் என்ற தகுதியுண்டு என்கிறது ஜோதிடம். நிபுண யோகத்துக்கு, இக்கட்டான சூழலில் இருந்து விடுபடும் தகுதி உண்டு.
அகப்பட்டவனும் ஓடிப்போனவனும்!
‘அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் குரு; ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு’ – என்ற சொல் வழக்கு அர்த்தமுள்ள ஒன்று. 8-ல் வந்த குரு தப்பான இடத்தில் அமர்ந்ததால், தன்னிச்சையான செயல்பாடு தடைப்பட்டது. ராசியின் தரத்துக்கு ஏற்பச் செயல்படும் நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் சிக்கலில் அகப்பட்டுத் திணறுகிறான். 9-ல் வந்த குரு – தன்னிச்சையாகச் செயல்படும் திறன் குன்றாமல் இருப்பது. ஐந்துக்கு ஐந்தான பூர்வபுண்ய ஸ்தானத்தின் ஐந்தான பாவாத்பாவத்தில்- ஒன்பதில் இருப்பதால் சிக்கலில் சிக்காமல் வெளிவந்து விடுகிறான். அதில் அகப்படாமல் ஓடிப்போய் விடுகிறான் என்கிறது அந்த விளக்கம். சுப கிரகமான குருவின் ராசி சம்பந்தத் தால் ஏற்படும் விபரீத விளைவுகளும் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது அது.
புதன் த்ரிம்சாம்சகத்தின் தொடர்பால் ஏற்படும் தனி விளைவையும் சுட்டிக்காட்டுகிறது. ராசியின் 60, 30, 15, 12, 10, 9, 7 போன்ற பிரிவுகள் த்ரிம்சாம்சகத்தை ஒட்டி வந்தாலும், பலனை நிர்ணயம் செய்வது புத த்ரிம்சாம்சகம் என்று விளக்குகிறது. வெப்ப கிரகங்களும் தட்ப கிரகங்களும் த்ரிம்சாம்சகத்தோடு இணைந்திருந்தாலும், அவற்றின் சேர்க்கையில் புதனின் மாறுபாடு எப்படி இருக்கும் என்பதை த்ரிம்சாம்சகமே நிர்ணயிக்கும்.
‘குளிர்ந்த நீரில் வெந்நீர் விடுக’
வெப்பம் – தட்பத்தின் தாக்கத்தில் மாறுபாடு, தட்பம் – வெப்பத்தின் தாக்கத்தில் மாறுபாடு – இவை இரண்டும் ஒரே மாறுபாட்டைத் தோற்றுவிக்காது. ‘குளிர்ந்த நீரில் வெந்நீரை விடு’ என்கிறது சாஸ்திரம் (உஷ்ணா: சீதாஸ்வாளீய). தட்பமும் வெப்பமும் சந்திக்கும் விஷயத்தில் பாகுபாடு உண்டு. குளிர்ச்சியில் வெந்நீர் கலக்கும்போது, குளிர்ச்சியின் தாக்கத்தால் வெந்நீரின் வெப்பம் மாறுபாட்டை உண்டு பண்ணும் சக்தியை இழந்துவிடும். வெந்நீரில் குளிர்ந்த நீரை இணைக்கும்போது, வெப்பம் தனது மாறுபாட்டை நடைமுறைப்படுத்துவதில் தடங்கல் இருக்காது என்ற தகவலை வெளியிடுகிறது சாஸ்திரம்.
சரிசமமான சேர்க்கையும் கூட விபரீத பலனை ஏற்படுத் தும் என்கிறது ஆயுர்வேதம். தேன், கபத்தைக் கரைக்கும். நெய், அக்னி பலத்தை வளர்க்கும். இரண்டும் நமக்குத் தேவையானதுதான். ஆனால் அதன் சேர்க்கை சமமாக இருந் தால் (அளவில் அல்ல தகுதியில்) விஷமாக மாறிவிடும் என்கிறது ஆயுர் வேதம். வெப்ப தட்ப கிரகங் களின் சேர்க்கையில், இரண்டில் ஒன்றின் தரம் வெளிப்படலாம். சேர்க்கையில் எதிரிடையான பலனும் வெளிப்படலாம். நமது சிந்தனையின் அளவு கோலின் அல்லது நமது அனுபவத்தின் கண்ணோட்டத்தில் அதன் வெளிப்பாட்டை நிர்ணயிக்க இயலாது. ஜோதிடம் சொல்லும் பலனை ஏற்க வேண்டும். ராசியின் தசவித பிரிவு களில் வெப்ப- தட்ப கிரகங்களின் இணைப்பு, நுணுக்கமான பல மாறுதல்களுக்கு வித்திடும். போதுமான ஆராய்ச்சியோடு அணுகினால் அவை நமக்குப் புலப்படும்.
கர்க்கடக ராசியில் புத த்ரிம்சாம்சகம்…
கர்க்கடக ராசியில் (இரட்டைப்படை ராசியில்) 5 பாகைக்கு மேல் 12 பாகை வரை புத த்ரிம்சாம்சகம். ஹோரையில் சந்திரன். முதல் த்ரேக்காணத்திலும் 10 பாகை வரையில் சந்திரன்தான். ராசியிலும் சந்திரன் பரவியிருப்பான். சதுர்த்தாம்சம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷஷ்ட்யம்சம் ஆகியவற்றில் வெப்பக் கிரகத்தின் சேர்க்கையும் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனாலும் பலனை இறுதி செய்யும் தகுதியானது, த்ரிம்சாம்சகத்தில் இணைந்திருக்கும்.
மொத்தம் 30 பாகைகளில் வெப்பக் கிரகத்துக்கு 10 பாகைகளும் (செவ்வாய்- 5, சனி- 5), தட்பக் கிரகத்துக்கு 20 பாகைகளும் (குரு-8, புதன்-7, சுக்கிரன்-5) த்ரிம்சாம்சகத்தில் அடங்கும். ஒற்றைப் படை ராசி மற்றும் இரட்டைப்படை ராசி என்ற பாகுபாட்டில் வெப்ப – தட்பக் கிரகங்களின் எண் வரிசை மாறுமே ஒழிய, ’10 : 20’ என்ற பிரிவு அப்படியே இருக்கும். நிசர்க்க சுபனான குருவுக்கு எண்ணிக்கையில் அதிக இடமாக 8 உண்டு. அடுத்து சுபக் கிரகங்க ளில் புதனுக்கு 7 எண்ணிக்கை இருக்கும் (ஆன்மிக வாழ்விலும் லோகாயதத்திலும் அவன் பங்கு உண்டு. அறிவுபூர்வமான ஆராய்ச்சி லோகாயத வாழ்க்கைக்குத் தேவை. பேரறிவை எட்டுவது, வாழ்வின் குறிக்கோள் இரண்டிலும் பங்கு பெறுகிறான் புதன்). உலகவியல் சுகபோகங்களை வாரி வழங்கும் தகுதியோடு நில்லாமல், சிற்றின்பத்துக்கும் காரகனாக இருக்கும் தகுதியும் சேர்ந்து, அவன் (சுக்ரன்) அடுத்த படியில் இறங்கி வருவதால், சுக்கிரன் 5 என்ற எண்ணிக்கையோடு முற்றுப் பெறுவதை கவனிக்க வேண்டும்.
வெப்ப- தட்ப கிரகங்களை ராசிகளில் கலந்துகட்டி பகிர்ந்தளித்தது போல் அல்லாமல், வெப்ப கிரகங் களை ஒரு பக்கமும், தட்ப கிரகங்களை மறுபக்கமுமாக த்ரிம்சாம்சகத்தைப் பிரித்ததில் இருந்து, அதன் சேர்க்கை யானது நம் புத்திக்கு எட்டாத பல மாறுதல்களை விளைவிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம்.
ஜோதிடர்களும் ஜோதிடமும்
இப்படியிருக்க, சிறப்பான இயல்பைச் சித்திரிக்கும் த்ரிம்சாம்சகத்தை அறவே ஒதுக்கிவிட்டு, ஒட்டும் உறவும் அற்ற ராகு- கேதுக்களைக் கையாண்டு பலன் சொல்லும் துணிவு ஜோதிடருக்கு வரக் கூடாது. 7-ல் ராகு கலப்புத் திருமணம், 5-ல் ராகு குழந்தையின்மை, 12-ல் கேது மோட்சத்தை அளிப்பான், 10-ல் ராகு தொழில் முடக்கம்… இப்படியெல்லாம் மேலெழுந்தவாரியாகப் பலன் சொல்வதுடன் நில்லாமல், புத்தகங்களிலும் எழுதி சவால் விடும் போக்கானது, ஜோதிட சாஸ்திரத்தின் கோட்பாடுகளைத் தரம் தாழ்த்துகிறது. அது ஜோதிட சேவை ஆகாது. ஜோதிடத்தின் சட்டதிட்டம், கோட்பாடு, அதன் அடிப்படைத் தகவல்களை அறிமுகம் செய்தவர்களின் சிந்தனைகள், மற்ற சாஸ் திரங்களின் பரிந்துரைகள், காலத்தால் தென்படும் கிரகசார மாறுதல்கள், நமது பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகிய அத்தனையையும் இணைத்து ஆராய்ச்சியில் இறங்கவேண்டிய நிலையில் ஒரு ராகுவையோ, கேதுவையோ, செவ்வாயையோ அல்லது ஒரு சனியையோ தனித்தனியே பலனை நிர்ணயம் செய்யப் பயன்படுத்துவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.
கூட்டுப் பலனே இறுதியானது!
12 ராசிகளிலும் எல்லா கிரகங்களின் பங்கும் இருக்கும். 60, 30, 15, 12, 10, 9, 7, 4, 2, 1 இப்படி ராசியைப் பல பகுதிகளாகப் பிரித்து, அந்தப் பகுதிகளுக்கு வெப்ப தட்ப கிரகங்களின் பங்கைச் சொல்லும். அதுபோல், ஒரு தசையில் அதிபதி ஒருவன் இருப்பான். ஆனால், அந்த தசையில் ‘புக்தி’ என்கிற பிரிவில் 9 கிரகங்களுக்கும் விகிதாசாரப்படி பலன் இருக்கும். அந்த புக்தியில் வரும் அந்தரத்திலும் 9 கிரகங்களுக்கும் விகிதாசாரப்படி பலன் இருக்கும். மற்ற கிரகங்களில் ஏதாவதொரு இணைப்பில் தனது பலனை இறுதி செய்யும். இப்படியான கூட்டுபலனே இறுதி பலன் என்று இருக்கும் போது, ஏழரைச்சனி திண்டாடுவான், 8-ல் குரு மாட்டிக்கொள்வான், 11-ல் குரு எல்லாவற்றிலும் வெற்றி வாகை சூடுவான், 7-ல் சனி உயிர் துறப்பான், 10-ல் சுக்கிரன் ஓஹோவென்று இருப்பான்- இப்படியெல்லாம் பலன் நிர்ணயம் செய்ய ஜோதிடர்களுக்கு தடயம் ஏது என்று சிந்தனையாளர்களுக்குச் சிந்திக்கத் தோன்றும்.
சிந்தனை வளம் பெற்றவர்கள் அலசி ஆராய்ந்து செயல்படுவது அழகு. சிக்கல் இல்லாமல் தெளிவான பதிலை எளிதாக அளிக்கும் முறையை விஞ்ஞானத்தின் வழியில் ஜோதிடத்தில் கொண்டு வருவது இன்று வரையிலும் வெற்றிபெறவில்லை. ஆக, ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது ஜோதிடத்துக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment