For Read Your Language click Translate

14 June 2014

தமிழ்வலைப்பூக்களின் வரலாறு:யூத்புல் விகடனில் வெளிவந்த கட்டுரை



வலைப்பூ! அமிதாப்பச்சன் முதல் ஆண்டிபட்டி முருகேசன் வரையில் உற்சாகமாக

உலவும் தளம். உலகளாவிய இணையதளத்தில் தனக்கென ஒரு தளம். அதில் உங்கள் படைப்புத் திறமையை, எழுத்துக்களாக, புகைப்படங்களாக, திரைப்படங்களாக இன்னும் உங்கள் கற்பனை எல்லையின் பரப்புக்கு ஏற்ப உலகத்தின் பார்வைக்கு முன்வைக்கலாம்.


வலைப்பூ... ஆங்கிலத்தில் 'பிளாக்' (blog) என்பார்கள். 'வலைப்பதிவர்கள்' என்றொரு தனி சமூகமே இன்று இயங்கிக்கொண்டு இருக்கிறது. தன் மனதில் தோன்றும் கருத்துக்களை உடனடியாகத் தெரிவிப்பதற்கும் அதற்கான விமர்சனங்களைப் பெறுவதற்கும் உதவும் ஊடகமாக வலைப்பூக்கள் விளங்குகின்றன. தங்கள் வலைதளத்தையே விசிட்டிங் கார்டாகக்கொண்டு தங்கள் எதிர்காலத்தைச் செதுக்கிக்கொண்டவர்கள் பலர். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பிறர் உதவி இல்லாமல் இணைய இணைப்புகொண்ட ஒற்றைக் கணினி மூலம் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது? அலசுகிறார்கள் சில வலைப்பதிவர்கள்!

"பிளாக் எழுதுவதால் நேரம் வீணாவதைத் தவிர ஏதும் உபயோகம் இல்லை என்றுதான் என்னிடம் ஆரம்பத்தில் எல்லோரும் கூறினார்கள். ஆனால், 'கேபிள் சங்கர்' என்ற பெயரில் வலைப்பூ எழுதி வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் என் வாழ்க்கையில் அபார வளர்ச்சி!" என்கிறார் சங்கர் நாராயணன். "கேபிள் டி.வி தொழிலுடன், சினிமாவிலும் பணிபுரிந்துகொண்டு, திரைப்பட இயக்குநர் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த வேளையில்தான், எனக்கு அறிமுகமானது வலைப்பூ. ஆரம்பத்தில் படிக்க சுவாரஸ்யமாக இருந்த வலைப்பூ, போகப் போக என்னையும் 'வலை'யில் சிக்கவைத்துவிட்டது. கதை, கட்டுரை, சினிமா விமர்சனங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்த என் முதல் கதையை ஆனந்த விகடன் வெளியிட்டு என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. இப்போது 'லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்', 'சினிமா வியாபாரம்' என இரண்டு புத்தகங்களை வெளியிட உதவியது என் வலைப்பூ மூலம் கிடைத்த வெளிச்சமும் அறிமுகங்களும்தான். சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் என் நீண்ட காலக் கனவு. என் வலைப்பூ எழுத்துக்கள் என் கனவினை நிறைவேற்ற ஒரு தயாரிப்பாளரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அடுத்த இன்னிங் ஸைத் துவக்கியிருக்கிறேன்!" என்கிறார் உற்சாகமாக!

பிற எந்த ஊடகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் வலைப்பூக்களில் உண்டு. அது பின்னூட்டங்கள். உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிர£கவும் வந்து குவியும் கருத்துக்கள்... உங்களை உற்சாகமூட்டும், திருத்தும், செதுக்கும். டெல்லியில் பணிபுரிந்துகொண்டே தமிழில் வலைப்பதிவு எழுதும் விக்னேஷ்வரிக்கு டெல்லிக்கும் தமிழகத்துக்குமான இடைவெளியைக் குறைப்பது அவரது வலைப்பூவே.

"காகிதங்களில் எழுதிக் கிறுக்கிக் கசக்கி எறிந்து, இறுதியில் எழுதியதைப் பலமுறை அடித்துத் திருத்திப் பொக்கிஷமாக வீட்டு அலமாரியில் நிரப்பி வந்த நாட்களைக் கடந்துவிட்டோம். மனதில் தோன்றுவதைக் கணினியில் தட்டத் தட்ட வார்த்தைகள் உயிர்ப்பிக்கின்றன. மறுபடி... மறுபடி வாசிக்கிறோம். திருத்துகிறோம். ஒரு சொடுக்கலில் வலைப்பூக்களின் மூலம் நண்பர்களுடன் பகிர்கிறோம். உடன் வரும் ஊக்கங்களையும், தோள் தட்டுதல்களையும், தவறுகளுக்குக் குட்டும் கரங்களையும் நம் கணினித் திரையில் பெறுகிறோம். இது படைப்பாளிகளுக்கு உள்ளபடியே உற்சாகமான சங்கதி!" என்கிறார்.

ஓர் இலக்கியப் பத்திரிகையில் எழுதினால், அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையை நாம் கணிக்கக்கூட முடியாது. ஆனால், பிளாக்கில் எழுதிய சில மணி நேரங்களில் உடனுக்குடன் எதிர்வினைகள். பாராட்டு, திட்டு, விமர்சனம் என்று பலவாறாகக் குவியும். அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதும் எளிது. அப்படி பிளாக் மூலம் தொடங்கும் உறவுகள் நட்பாகத் தொடர்வது வலையுலகத்தின் பாசிட்டிவ் பக்க விளைவு.

ஆரம்பத்தில் வலைப்பூக்களில் விளையாட்டாக எழுதத் தொடங்குபவர்கள், பிறகு மற்ற வலைப்பூக்களைத் தேடித் தேடிப் படிக்கப் பழகுகிறார்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் குறைந்து வருகிற நிலையில், அந்த இடைவெளியை நிரப்புகின்றன வலைப்பூக்கள்.

அன்றாட நிகழ்வுகள்பற்றிய லைட்டான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது, நகைச்சுவை இழையோட எழுதுவது திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமாருக்குக் கைவந்த கலை.

'பரிசல்காரன்' என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் தமிழின் பிரபல பதிவர்களுள் ஒருவர். "வலைப்பூ எழுதுவதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டாரம் மிகப் பெரிய பலம். நல்ல எழுத்தைத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருவதால், உங்களுக்கு கிடைக்கும் உலகளாவிய நட்பு வட்டாரம் மூலம், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் குறைந்தது ஒரு வலைப் பதிவரையேனும் கண்டுகொண்டு நட்பு பாராட்டலாம்.

தமிழை நேசித்து வாசிக்க, எழுத ஆசைப்படுபவர்களுக்கு ஒரு களம் அமைத்துக்கொடுக்கிறது வலைப்பூக்கள். பதிவர்களே வலைப்பதிவர் பட்டறை நடத்தி எழுத்தார்வம் மிக்கவர்களுக்கு இணையத்தில் எழுதப் பயிற்சியும் ஊக்கமும் வழங்குகிறார்கள். திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் 'சேர்தளம்' என்ற அமைப்பின் மூலம் மாதம் ஓர் எழுத்தாளரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். இதனால், இளைய தலைமுறையின் வாசிப்பு அனுபவம் விரிவடைகிறது!" என்கிறார் கே.பி.கிருஷ்ணகுமார்.


பெண்களின் பங்களிப்பும் நிறையவே உண்டு. அரசியல், சட்டம், இலக்கியம், சினிமா, சமையல், குழந்தை வளர்ப்பு என்று எல்லாம் எழுதுகிறார்கள், விவாதிக்கிறார்கள். "பொதுவாக, நாம் எழுதியதை நண்பர்களிடமோ குடும்பத்தினரிடமோ காட்டுவதற்குக் கூச்சப்படுவோம். அன்புக்குரியவர்கள் என்பதால் நமது எழுத்தை அவர்கள் பாரபட்சம் இல்லாமல் விமர்சிக்க மாட்டார்கள். தயக்கம் இல்லாமல் நமது எழுத்தைப் படைக்கவும், நேர்மையான‌ விமர்சனம் பெறவும் உகந்த‌ இடம் வலைப்பூக்கள்தான்!" என்கிறார் பதிவர் தீபா. "சமூக ‌சிந்தனை உள்ள பல கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்படுவது பதிவுலகில்தான் அதிகம் அரங்கேறுகிறது. எவ்வித‌ நிர்ப்பந்தமும் இல்லாமல் உண்மைகளை எழுதக்கூடிய‌ களம் இது.

அரசாங்கத்துக்கும் சட்டத்துக்கும் கலாசார ஒழுங்குக்கும் பயந்து பொதுவெளியில் பேசத் தயங்கும் பல விஷயங்கள் வலைப்பூக்களில் வெளிப்படையாகவும் விரிவாகவும் விவாதிக்கப்படுகின்றன. பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இணையமும் வலைப்பூக்களும் ஒரு வரப்பிரசாதம். புலம்பெயர்ந்த பெண்கள் பலரும் தங்கள் வேர்களோடு உறவாடிக்கொள்வதற்கு வலைப்பூக்கள் வெகுவாக உதவுகின்றன. சமையல் குறிப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய தொழில்கள் குறித்து ஏராளமானோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறார்கள். கவிதை, கதை, ஓவியம், கைவினைப் பொருட்கள் என்று தங்கள் தனித்திறமைகளை மெருகேற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் பெண்கள் வெகு அழுத்தமாகத் தங்கள் தடங்களைப் பதித்து வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தை, சமையல் இது தவிர, வேறு உலகமே இல்லை என்று வருந்திய காலம் போய், இப்போது தங்களுக்கான எல்லைகளையும் நட்பு வட்டத்தையும் வலைப்பூக்கள் மூலம் விரிவுபடுத்தி வருகிறார்கள்!" என்பது தீபாவின் கருத்து.

'மக்கள் சட்டம்' என்ற பெயரில் வலைப்பூவைத் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருபவர் வழக்கறிஞர் சுந்தர்ராஜன். "சட்டத்தையும் நீதிமன்ற நடைமுறைகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகும் கருத்துக்களைப் பதிவுசெய்ய 'மெயின் ஸ்ட்ரீம்' ஊடகங்களும், பல இணையதளங்களும் தயக்கம் காட்டின. உடனே நான் 'மக்கள் சட்டம்' என்ற வலைப்பூ தொடங்கினேன். காவல் நிலைய சித்ரவதைகளுக்கு எதிரான கட்டுரையுடன் தொடங்கிய மக்கள் சட்டம், என்கவுன்ட்டர் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் படுகொலைகள், அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் களவாடப்படும் மக்களின் அறிவு சார்ந்த சமூக உரிமைகள், கிரெடிட் கார்டு நிறுவனங்களின் வணிக அறமற்ற செயல்கள் உள்ளிட்ட ஏராளமான மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தினேன். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுப்பிய சில விவகாரங்களும் பரவலான வாசகர்களைச் சென்று அடைந்தது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு வாசகர்கள் தனிப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தேடி தொடர்புகொண்டனர். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் இயன்ற வரையில் ஆலோசனை கூறப்பட்டது. பொதுத் தன்மை வாய்ந்த சில கேள்விகள், யாரையும் குறிப்பிடாவண்ணம் புதிய கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. மன நிறைவளிக்கும் பணி!" என்று மனம் நெகிழ்கிறார் சுந்தர்ராஜன்.


ஆனால், ஒரு வலைப்பதிவு எழுதத் துவங்கிய உடனேயே எல்லோரும் எழுத்தாளர் ஆகிவிடுவது இல்லை. அதற்குத் தொடர்ச்சியான முயற்சியும் இடைவிடாத பயிற்சியும் அவசியம். "புதிதாக‌ எழுத வருபவர்கள் பிற வலைப்பூக்களைப் படித்து ரசிக்கலாம் என்றாலும், அதேபோல் எழுத வேண்டும் என்று முயல்வதைவிட, தங்களுக்குப் பிடித்ததை, தங்களைப் பாதித்த விஷயங்களை உண்மையாக, நேர்த்தியாக எழுதத் தொடங்குவது நல்லது.

தொடக்கத்தில் சிறு இடுகைகளாகக்கூட ஆரம்பிக்கலாம். நம் பதிவு பிரபலம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால், அயராமல் முயன்று எழுத்தின் தரத்தைக் கூட்டுவதில்தான் ஆர்வம் காட்ட வேண்டும். விமர்சனங்களை நேர்மையாக வெளிப்படுத்தவும் வரவேற்கவுமான சூழல் வேண்டும். இல்லாவிட்டால் பதிவுலகம் வெறும் அரட்டைக் கச்சேரி நடக்கும் இடமாகிவிடும்!" என்று எச்சரிக்கிறார் தீபா.

எழுத்து ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு, பிரபலங்களுடன் நட்பு, வணிகரீதியான வருமானம், பளிச் சமூக அந்தஸ்து... எல்லாம் உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கிறது. பிறகென்ன தயக்கம்... பிரபல வலைப்பதிவர் ஆக வாழ்த்துக்கள்!
வலைப்பூ ஒன்று உருவாக்குவது எப்படி? நன்றியூத்புல் விகடன்
வலைப்பூ... சில கேள்விகள் - சில விளக்கங்கள்!
வலைப்பூ பற்றிய சில அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் கோவையின் 'ஓசை' செல்லா.


"பிளாக் துவக்குவது எப்படி?"

"ஒரு பிளாக் துவக்க, முதலில் நீங்கள் ஜி-மெயிலில் கணக்கு தொடங்க வேண்டும். பிறகு, பிளாக்கர்.காம் (Blogger.com) சென்று உங்களுக்கான பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லைத் (Password) தேர்ந்தெடுக்கலாம். அவ்வளவுதான் உங்களுக்கான தளம் தயார். அதில் நீங்கள் யுனிகோட் எழுத்துரு மூலம் உங்கள் கட்டுரைகளைப் பதியலாம். புகை - திரைப்படங்களைக் காட்சிக்கு வைக்கலாம். உங்கள் கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களை (Comments) நீங்களே தணிக்கை செய்யலாம். இப்போது பிளாக்கர்.காம் போலவே வேர்ட்பிரஸ்.காமும் (Wordpress.com) வலைப்பூ தொடங்கும் வாய்ப்பை அளிக்கிறது!"

"என் கட்டுரைகளை யார் படிப்பார்கள் அல்லது வாசகர்களை எப்படித் தேடிப் பிடிப்பது?"

"அந்தக் கவலையே உங்களுக்குத் தேவை இல்லை. ஏனெனில், ஆயிரக்கணக்கான வலைப்பூக்களைத் திரட்டும் திரட்டிகள் (Aggregator) ஏராளமாக இணையத்தில் இயங்குகின்றன. தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்வெளி ஆகியவை குறிப்பிடத்தக்க வலைப்பூ திரட்டிகள் ஆகும். உங்கள் வலைப்பூவைத் திரட்டியில் இணைத்துவிட்டால், ஆயிரக்கணக்கான வாசகர்கள் உங்கள் வலைப்பூக்களைப் படிக்கவும் செய்வார்கள். ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை நீங்கள் படிக்கவும் முடியும்!"

"வலைப்பூ எழுதுவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியுமா?"

"நிச்சயமாக. எழுத்தின் தரம் மேம்பட மேம்பட, உங்கள் வலைப்பூவின் ஹிட்ஸ் (வருகையாளர்கள்) அதிகரிக்கும். ஹிட்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளம்பரங்களும் வரும். உங்கள் வலைப்பூவில் உள்ள விளம்பரத்தை ஒருவர் கிளிக் செய்தாலே உங்களுக்கு வருமானம் உண்டு. கூகுள் அட்சென்ஸ் என்ற நிறுவனமும் ஏராளமான விளம்பரங்களை அளித்து ஊக்குவிக்கிறது. இப்போதைய ட்ரெண்டில் பிரபல பதிவர் அந்தஸ்தை எட்டும் ஒருவருக்குக் குறைந்தபட்சம் மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் விளம்பர வருமானம் கிடைக்கும்!"

"வலைப்பூவில் கட்டுரைகள் மட்டும்தான் பதிய முடியுமா?"

"அது உங்கள் இடம்... நீங்கள் எதுவும் செய்யலாம். சமீபமாக 'விளாக்' (vlog) என்னும் வலைப்பூக்கள் பிரபலமடைந்து வருகின்றன. விளாக் என்பது வீடியோ ஏற்றக்கூடிய பிளாக் ஆகும். ஒலி-ஒளி வலைப்பூக்களுக்கு ஏராளமாக விளம்பரங்கள் குவிகின்றன. நான் என் வலைப்பூவில் பயன்படுத்தும் புகைப்படங்களை ஸ்டாக் ஏஜென்சி எனப்படும் புகைப்பட நிறுவனம் காப்புரிமைக்காகக் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறது!"

"வலையுலகின் எதிர்காலம் எப்படி இருக்கும்?"

"மிகவும் பிரகாசமாக இருக்கும். கோவை செம்மொழி மாநாட்டில் இணைய மாநாடும் ஒரு பகுதி. வலைப் பதிவர்களையும் எழுத்தாளர்களாக அங்கீகரித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடத்தினார்கள். எனவே, பிரபல பதிவரே 'பிரபல எழுத்தாளர்' ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை!"

இணையத்தில் எழுதுவதன் மிகப் பெரிய பலம் அதன் ரகசியத் தன்மை. நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில்தான் எழுத வேண்டும் என்றில்லை. எந்தப் பெயரில் வேண்டுமானாலும் வலைப்பதிவு தொடங்கி எழுதலாம்.
பின்னூட்டங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் அனானிமஸாகக் குறிப்பிடப்படும் வசதி உண்டு. ஒருவேளை அத்தகைய கமென்ட்களை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், அதை அனுமதிக்காமல் இருப்பதற்கான வசதி உண்டு.
உங்களது மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை உள்ள நபர்களிடம் மட்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிப்பதால், தேவையற்ற மின்னஞ்சல்களைத் தடுக்கலாம்.
வலைப்பதிவு எழுதும் பெண்கள் தங்கள் புகைப்படங்களை வலையில் ஏற்றும் முன், யோசித்து ஏற்றுவது நல்லது. ஏனெனில், இணையம் என்பது எல்லோராலும் எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தப்படும் தளம் ஆகும்.
உங்களது எழுத்துக்களில் உச்சபட்ச நாகரிகம் அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களது பதிவுகளை வலைப்பதிவில் ஏற்றும்போது புகைப்படம், வீடியோ ஆகியவற்றை ஏற்றினால், அது படிப்பவர்களுக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டும்.
புகைப்படம், வீடியோ ஏற்றுவது மட்டுமல்லாது கருத்துக்கணிப்பு நடத்துவது, டிவிட்டர் அப்டேட்ஸ்களை ஏற்றுவது என்று பல வசதிகள் இப்போது வலைப்பூக்களில் வந்துவிட்டன!

No comments:

Post a Comment