For Read Your Language click Translate

06 May 2014






மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 03.

ஒரு அளவுக்குப் பயிர் வட்டங்களின் பிரமாண்டங்களையும், பரிமாணங்களையும் நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே, பயிர் வட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டிய இடத்திற்கு இப்போது வந்திருக்கிறேன். பயிர் வட்டங்களின் வரலாறு முதன் முதலாக 1678 ம் ஆண்டு தென்கிழக்கு இங்கிலாந்தில் அமைந்த ஹார்ட்ஃபோட்ஷையர் (Hartfordshire) என்னுமிடத்தில் பிசாசு ஒன்றினால், ஒ...ரு விவசாயிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது என்ற புராதனக் கதையுடன் ஆரம்பமாகிறது.

இந்தப் பிசாசுக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருந்தது அல்லது இல்லை என்ற நிலையில், 1920ம் ஆண்டளவில் மீண்டும் பயிர் வட்டங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனால் 1980 களிலும் 90 களிலும்தான் சிக்கலான வடிவங்களுடன் இவை அதிகமாக காணப்படத் தொடங்கின. இந்தக் கால கட்டங்களிலிருந்து தொடர்ச்சியாய் ஒவ்வொருவருடமும் 300 பயிர் வட்டங்கள் உலகம் முழுவதும் தோன்ற ஆரம்பித்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மன்,போலந்து, பெல்ஜியம், இத்தாலி, சுவீடன், நார்வே, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இந்தப் பயிர் வட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு அதிகமான பயிர் வட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதுவரை உலகம் முழுவதுமாக பத்தாயிரத்துக்கும் அதிகமானவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உருவாவதில் ஒரு ஆச்சரியமான விசயம் ஒன்று உண்டு. எவ்வளவு சிக்கலான பயிர் வட்டங்களாக இருந்தாலும் கூட, நான்கு மணி நேரங்களுக்குள் உருவாக்கப்பட்டுவிடுகின்றன. சில நிமிடங்களில் உருவாக்கப்பட்ட வட்டங்களும் உண்டு. 80 வீதத்திற்கு அதிகமானவை இரவிலேயே உருவாக்கப்படுகின்றன என்றாலும், பகலிலும் பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழுவதை நாம் தடுக்க முடியாது. "உண்மையில் இந்தப் பயிர் வட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன?" என்பதே அந்தக் கேள்வி. அதாவது, இவை மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா? இல்லை, மனிதன் தாண்டிய வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமே இந்தக் கேள்வியில் உள்ளடங்கியிருக்கிறது.

மனிதனால்தான் மட்டும் இவை உருவாக்கப்படுகின்றன என்று இருக்கும் பட்சத்தில் நான் இந்தத் தொடரை எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்கப் போவதில்லை. மனிதன் தாண்டி வேறு ஒரு சக்தி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்னும் சந்தேகம்தான், இவை இவ்வளவுபரவலாக, உலகப் பிரசித்தி பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது. இந்தப் பயிர் வட்டங்களை ஆரய்வதற்கென்றே உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பயிர் வட்ட ஆராய்ச்சியாளர்கள் (Crop Circle Researchers) என்று அழைக்கிறார்கள். அவர்களிடம் "இந்த வட்டங்கள்மனிதர்களால் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேளிவியைக் கேட்டால், "ஆம்" என்றே பதிலளிக்கின்றார்கள். நமது அடுத்த கேள்வியாக, "இவை மனிதர்களால்மட்டும் உருவாக்கப்படுகின்றனவா?" என்று கேட்டால், "இல்லை" என்று பதிலளிக்கிறார்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், "இந்த வட்டங்களில் பலவற்றை மனிதர்கள் செய்திருப்பது என்னவோ உண்மை. ஆனால் இவற்றில் பல, மனிதர்களால் செய்யப்படாதவை" என்பதே.

மனிதர்களால் உருவாக்கப்படாத பட்சத்தில், இவற்றை யார் செய்திருக்க முடியும்? என்ற கேள்விக்கு யாரும் இதுவரை தெளிவான பதிலைச் சொல்லி விடவில்லை.ஆனால், யார் செய்திருக்கக் கூடும் என்பதை நம்மால் இலகுவாகக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில், ஆதாரங்களை அள்ளித் தருகிறார்கள் அவர்கள். நேரடியாகப் பதிலைத் தருவதால்  உருவாக்கியவர்களைக் காட்டியே தீர வேண்டிய நிலை அறிவியலில் இருப்பதால். யாரும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.இந்த நிலையில்தான் துணிச்சலாக, இதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்றை எடுத்து ஒருவர் வெளியிட்டார். அவர் படம் வெளியிட்டது என்பது பெரிய விசயமாக இருந்தாலும், அவரை இங்கு நான் குறிப்பிட விரும்புவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. அந்தக் காரணம் என்ன தெரியுமா? அந்தப் படத்தை எடுத்தவர் ஒரு தென்னிந்தியர். படத்தை எடுத்தது மட்டுமில்லாமல், அதை இயக்கி நடித்தும் இருக்கிறார். அவர் பெயர் 'நைட் சியாமளன்' (M. Knight Shyamalan).ஆனால் மனோஜ் சியாமளன் என்றே பலரால் அழைக்கப்படுகிறார். அருமை நண்பர் மனோஜை ஞாபகப்படுத்துவதால் நானும் அவரை மனோஜ் சியாமளன் என்றே அழைக்க விரும்புகிறேன். மனோஜ் சியாமளனின் அப்பா ஒரு மலையாளி, அம்மா பாண்டிச்சேரியைச் சேர்ந்த பெண்.

'சிக்ஸ்த் சென்ஸ்' (Sixth Sence), ‘அன்பிரேகபிள்' ( Unbreakable) என்று உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்த இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் மனோஜ் சியாமளன். இந்த இரண்டு படங்களுமே அமானுஷ்ய சக்திகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டன. சொல்லப் போனால் அவரின் அனைத்துப் படங்களும் அமானுஷ்ய சக்திகளையும், மிஸ்டரிகளையும் மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த வெற்றிப் படங்களுக்குப் பின்னர் 2002 ம் ஆண்டு மனோஜ் சியாமளன் எடுத்த படம்தான் 'சைன்ஸ்' (Signs). இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில், சோளப் பயிர்கள் வளர்ந்த பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பயிர்வட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில், இந்தப் பயிர் வட்டங்களை யார் உருவாக்குகிறார்கள் என்ற கேள்விக்கான விடையையும்சியாமளன் அளித்துள்ளார். அவர்கள் யார் தெரியுமா? ஏலியன்கள். விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்த வேற்றுக் கிரகவாசிகளே இந்தப் பயிர் வட்டங்களை உருவாக்குகிறார்கள் என்று கதை அமைத்திருந்தார் மனோஜ் சியாமளன். 
உண்மையில் பயிர் வட்டங்கள் உருவாவதில் என்னதான் நடக்கிறது? அதுவும் குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில் மட்டும் ஏன் 80 விதமான பயிர் வட்டங்கள் உருவாகின்றன? இவை மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றனவா? இல்லை ஏலியன்கள் அல்லது மனிதனல்லாத வேறு ஏதும் ஒரு சக்திதான் இதைஉருவாக்குகின்றதா?

இவையெல்லாம் நம்முன் எழும் கேள்விகளாக இப்போது இருக்கின்றன. இந்த உண்மைகளை ஒரு அரசு நினைத்தால், அடுத்த நிமிடம் கண்டுபிடித்து மக்களுக்கு அதன் உண்மையைத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். ஆனால் இந்த உண்மைகள் மக்களுக்குச் சொல்லப்படாமல் ஒரு பதட்டத்திலேயே மக்கள் ஏன் வைக்கப்பட்டிருக்கின்றனர்? சொல்லப் போனால், இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? இவை பற்றி விளக்கமாக இனி வரும் பகுதிகளில் நாம்தெளிவாகப் பார்க்கலாம். பிற்குறிப்பு: "கடவுளையே நம்ப வேண்டுமானால் ஆதாரங்கள் காட்டு. இல்லையென்றால் விலகிப் போ! நமக்கு வேலை நிறைய இருக்கிறது" என்று சொல்லக்கூடிய, விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த வேளையில், ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது என்று சொல்வதை எப்படி ஏற்பது? இது எல்லாம் கொஞ்சம் ஓவர்" என்றே நீங்கள் நினைக்கலாம். நானும் இங்கு ஏலியன்கள்தான் இவற்றை உருவாக்கின என்று சொல்லி உங்களை மர்மமான ஒரு நிலையில் வைத்திருக்க விரும்பவில்லை.

இந்த Crop Circle பற்றி நீங்கள் இணையத்தில் பார்த்தால், இவை மனிதனாலேயே செய்யப்பட்டது என்று ஒரு பகுதியும், இல்லை இது மனிதனால் செய்யப்படவில்லை என்று மற்றொரு பகுதியும் பிரிந்து விளக்கங்களைத் தமக்கு ஏற்றவாறு அளித்துக் கொண்டிருப்பார்கள். இதில் நீங்கள் எதை வாசிக்கிறீர்களோ,அதுவே உண்மை என்ற நிலைப்பாட்டையும் நீங்கள் எடுக்கும் சூழ்நிலை வரலாம். ஆனால் நிஜம் என்பது வேறாக இருக்கலாம். ஆகவே நிதானமாக இந்தப் பயிர் வட்டங்கள் பற்றிய அனைத்து உண்மைகளையும் எடுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன். இறுதியில் நாம் அனைவரும் சேர்ந்தே ஒரு முடிவுக்கும் வந்துவிடலாம்.

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போமா..?

No comments:

Post a Comment