For Read Your Language click Translate

Follow by Email

10 May 2014

விருட்ச சாஸ்திரம்-2வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை தரக்கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாதது தான். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, தமிழகத்தில் 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்கு கூட ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தை போல் வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.

சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்...50 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை இப்படியா இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.
லண்டனில் தேம்சு, பாரீசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்புயூம் அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்த பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு. குட்டிக்கப்பல்களும் உண்டு.

ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், விருட்ச ஆயுர்வேதம் என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தில், அழிந்து போக இருந்த பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று.
கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்த நூலைக்கொண்டு போய், லண்டலில் வைத்துக் கொண்டனர். 1996 ஆண்டு தான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன், இதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

விருட்ச சாஸ்திரத்தின் படி, நம் ஜென்ம நட்சத்திரத்திற்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்னமரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும் 4 பாதங்கள். ஆக மொத்தம் 108 மரங்கள். நமது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.
ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரத்தை விரிவுபடுத்துகிறோம் என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல. உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.

எந்த நகரமும், 500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இப்போது இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பது இல்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் அதை மட்டும் வெட்டி விடுகின்றனர்.
மெரீனா கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்று சொல்லி அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கிரீட் போட்டு விட்டால் அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் தேவை. ஆனால் மரத்தை வெட்ட ஒரு மணிநேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால் திரும்பக் கொண்டு வர முடியுமா?

மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவே தான் காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதே போல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்கு உரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?
மரங்கள் இருப்பதால் தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது. இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கு விரோதமான செயல் அல்லவா?

"மரம் நடுங்கள்" என, தெருவுக்கு தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஏனென்றால், மரம் நடுவது தனிமனிதர்களின் கைகளில் இல்லை. இதில், அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா ஒரு சேவையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது. காரணம், நாம் சிறுவயதில் படித்தோம். மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.

அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும்.
மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தை போல், நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாடு.
மாடு என்றால், சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்.

இந்த அர்க்கை, 30 மிலி எடுத்து 100 மிலி தண்ணீரில் கலந்து குடித்தால் புற்று நோயே வராமல் தடுக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மரப்பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதய நோயை தவிர்க்கலாம்.
இது போல் அர்க் மூலம் பல நோய்களை தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள் தான் விவசாயப் பொருளாதாரத்தில் ஆதாரமாக இருந்திருக்கின்றன.

மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டு மிரண்டித்தனம் என்று, இந்தியக்கலச்சாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் காரல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும் தான்.
ரசாயனப் பொருட்களில் உலகம்அழிந்து கொண்டிருப்பது பற்றி மேற்குலக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு ஒரே தீர்வாக இருப்பது, இந்திய பாரம்பரிய இயற்கை விவசாயமும் இயற்கை மருத்துவமும் தான்.

ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால் பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்கு தெரியும்.

'பஞ்ச காவ்யம்' என்பது ஒரு அருமையான இயற்கை உரக்கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால்,தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
நம் விவசாய நிபுணர்கள், இந்த பஞ்சகவ்யத்தை பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதி செய்து, நம் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறலாம்.

ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம். ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.

இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர் எனக்கு முக்கியமாக தெரியவந்தது. அவர் எழுதியுள்ள 'பஞ்சகாவ்யம்' பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார். ஆபிரகாமிய அகங்கார பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைக்கு முன்னால், மண் விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதி ஒளி விட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளளி, ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.
அதற்கு என்ன செய்யலாம் நாம்?
                                                                                                                  நன்றி : சாருநிவேதிதா