For Read Your Language click Translate

16 May 2014

1 சென்ட் நிலம் இருந்தால் அந்த இடத்தை எப்படி பிரித்து காய்கறி தோட்டம் அமைக்கலாம்

1 சென்ட் நிலம் இருந்தால் அந்த இடத்தை எப்படி பிரித்து காய்கறி தோட்டம் அமைக்கலாம் என்று பார்க்கலாம்.



காய்கறி பயிரிட தேர்வு செய்துள்ள 1 சென்ட் நிலத்தில் ஒரு ஓரமாக 3 முதல் 4 மீட்டர் நீளம் மற்றும் அகலத்தில் உள்ள இடத்தை நீண்ட கால பயிர்களான முருங்கை( முருங்கைக்காயின் தற்போதைய விலை 10 ரூபாய்), கறிவேப்பிலை (கொஞ்சம் ஓசி கிடைத்தால் குழம்பை மணக்க வைத்து விடலாம் என்று வியாபாரிகளிடம் இப்போதும் கறிவேப்பிலைக்காக கெஞ்சுகிறோம்), எலுமிச்சை( வெயில் காலத்தில் ஜூஸ் கலக்க), வாழை, பப்பாளி போன்றவற்றை பயிர் செய்ய ஒதுக்கி விடலாம்.
எங்கள் வீட்டு தக்காளி தொட்டி(இதற்கு நீர்  தாங்கு ஊடகமாக தென்னை நாரை பயன்படுத்தி இருக்கிறேன்
 இப்போது 1 சென்ட் இடத்தில் 4 அடி போக மீதம் இருக்கும் உள் சதுரத்தை எந்த காய்கறிகளுக்காக பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இந்த இடத்தில் அரை மீட்டர் அகலத்திற்கு நடைபாதை ஒன்றை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதாவது நாம் விளைவிக்கும் காய்கறிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச, அதன் வளர்ச்சியை கண்காணிக்க நடந்து செல்வதற்கு இந்த பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இந்த பாதையால், எஞ்சியிருந்த இடம் இரண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும்.

இந்த ஒவ்வொரு பாதியையும் மிகச்சரியான 6 பகுதிகளாக (ஒவ்வொரு பகுதியும் ஒன்றரை மீட்டர் நீளம், ஒருமீட்டர் அகலமுள்ள பாத்திகளாக) பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படி நாம் பிரிக்கும் போது 12 பாத்திகள் கிடைத்திருக்கும். இப்போது காய்கறி பயிரிடவுள்ள இந்த பாத்திகளை பயிர் செய்ய தயார் செய்ய போகிறோம்.

முதலில் நிலத்தை நன்றாக மண்வெட்டியின் உதவியால் ஒரு அடி ஆழத்திற்கு நன்கு கொத்தி கிளறி விடவேண்டும்.
அப்படி கிளறும் போது மண்ணில் இருக்கும் கற்கள், கட்டிகள்,களைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
இப்படி மண்ணை நன்றாக கிளறி விட்ட பிறகு நிலம் உயிரோட்டாக காட்சியளிக்கும். அப்போது ஒரு சென்ட் பரப்பளவிற்கு 100 கிலோ என்ற அளவில் மக்கிய தொழுஉரம் (உரக்கடைகளில் கிடைக்கும்) வாங்கி வந்து நிலத்தில் போட்டு நன்றாக மண்ணோடு மண்ணாக கலக்கும்படி செய்ய வேண்டும்.
பிறகு நாம் பிரித்துள்ள பாத்திகளை 45 செமீ அல்லது 60 செமீ இடைவெளியில் சிறுசிறுபார்களாக (ஒரு கேக்கை மேல்புறத்திலிருந்து வெட்டி ஒதுக்குவது போல்) அமைக்க வேண்டும். இப்போது நிலத்தை தயார் செய்யும் வேலை முடிந்து விட்டது. இனி பயிரிட போகிறோம்.
இயற்கை உரம் பயன் படுத்த பட்ட எனது வீட்டு ரோஜா செடி இது


விதைப்பு மற்றும் நடவு செய்யும் முறை
பயிர்களில் நேரடி விதைப்பு மற்றும் நாற்று விட்டு நடவு முறை என்று இரண்டு முறை இருக்கிறது. இதில் நேரடி விதைப்பு காய்கறிகளான வெண்டை, குத்து அவரை,கொத்தவரை,தட்டைப்பயறு ஆகியவற்றை பார்களின் ஒரு புறம் 30 செமீ இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். முளைக்கீரை, தண்டுக்கீரை மற்றும் அரைக்கீரை ஆகியவற்றை 1 பங்கு விதைக்கு 20 பங்கு மணல் கலந்து பாத்திகளில் தூவி விதைக்க வேண்டும். சிறிய வெங்காயத்தை நடைபாதை ஒரங்களில் விதைக்கலாம்.

இதற்கடுத்து நாற்று விட்டு நடும் பயிர்களை நடவு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தக்காளி, கத்திரி, பெரிய வெங்காயம் போன்ற செடிகளை ஒரு மாதத்திற்கு முன்பே மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து விதைக்க வேண்டும்.(இது பெரிய விடயமல்ல. தனியாக ஒரு இடத்தில் விதையை போட்டு செடி வளர்ந்து நிற்கும். பிறகு அதை பிடுங்கி எடுத்து வந்து நாம் அமைத்துள்ள பார்களில் மறுபடியும் ஊன்ற வேண்டும். இது தான் நாற்று விட்டு நடும் முறை)

இப்படி விதைத்த பின் 30 முதல் 40 நாட்களில் நாற்றுக்களை பறித்து பார்களின் ஒரு புறத்தில் 45 செமீ இடைவெளியில் குத்துக்கு 2 நாற்றுக்கள் வீதம் நடவேண்டும். நடவுக்கு பின் நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 3 ஆம் நாள் மறுபடியும் நீர்பாய்ச்ச வேண்டும். வீடுகளில் தொட்டிகளில் இந்த பயிர்களை வளர்த்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர்பாய்ச்ச வேண்டும்.
பூசணி, பரங்கி போன்ற தரையில் வளரும் கொடிகளை பாத்திக்கு 2 குழிகளில் விதைகளை விதைத்து கொடிகளை தரையில் படரவிட வேண்டும்.
இது தான் காய்கறி தோட்டம் அமைக்கும் முறை.

 குறிப்புகள்

நீண்டகால காய்கறிகளான கறிவேப்பிலை, முருங்கை,அகத்தி,தவசிக்கீரை,எலுமிச்சை, பப்பாளி,வாழை போன்றவற்றை நடுவதற்கு எடுக்கும் குழியின் அளவு குறைந்த பட்சம் 1 அடி குழி எடுத்து ஊன்ற வேண்டும். ஒரு தாவரத்திற்கு மற்றொரு தாவரத்திற்கும் இடையில் 6 அடி இடைவெளி இருப்பது நல்லது. அப்போது தான் சூரிய ஒளி ஒவ்வொரு தாவரத்திற்கும் நன்றாக கிடைத்து ஒளிச்சேர்க்கை நடைபெற்று தாவரம் நன்றாக வளரும்.
விதைகளை நடும் முன் குழிகளில் 10 மக்கிய தொழுஉரம்,100 கிராம் பி.எச்.சி. மற்றும் 50 கிராம் யூரியா,100 கிராம் சூப்பர்,50 கிராம் பொட்டாஷ் கலந்து குழிகளில் நிரப்பி நீர் ஊற்ற வேண்டும்.
பின்னர் பப்பாளி,எலுமிச்சை உள்பட தேர்வு செய்துள்ள கன்றுகளை நடலாம். பொதுவாக இது போல் மரக்கன்றுகள் எல்லாம் நர்சரிகளில் கிடைக்கின்றன. வாங்கி நடலாம்

மொட்டை மாடியில் காய்கறி சாகுபடி
காலியிடம் இல்லாத நிலையில் மொட்டை மாடிகளில், வராந்தாவில், மரப்பெட்டிகள்,காலிடப்பாக்கள், உடைந்த குடங்கள் ஆகியவற்றில் காய்கறி சாகுபடி செய்யலாம். இதற்கு இந்த டப்பாக்களில் செம்மண், மணல் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகியவற்றை சமஅளவு கலந்து நிரப்பி நன்கு வெயில் இருக்கும் இடங்களில் பாலீத்தின் காகிதத்தை விரித்து அவற்றின் மேல் அடுக்க வேண்டும்.
இவற்றில் தொட்டிக்கு 2 விதை வீதம் நேரடி விதைப்பு பயிர்களையோ, 2 நாற்றுக்கள் வீதம் நாற்று விடும் பயிர்களையோ நடவு செய்ய வேண்டும். இது போன்று பயிர் செய்யும் போது நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மண் நன்றாக காய்ந்த பிறகு தான் நீர் பாய்ச்ச வேண்டும். இடவசதிக்கு தக்கபடி தொட்டிகளை வைத்துக் கொள்ளலாம்.

செங்குத்து தோட்டம்
வீட்டின் முன்புறத்திலும்,பின்புறத்திலும் மேலும் மொட்டை மாடியிலும் கூட இடம் இல்லாதவர்கள் சூரியவெளிச்சம் வரும் இடத்தில் காய்கறிகள் பயிரிட முடியும். இதற்கு தேவை 7 அடிநீளம், 4 அடி உயரம் இரண்டு படிக்கட்டு அமைப்பையும் கொண்ட இரும்பு ஸடாண்டு தான். இதில் தொட்டிகளை தாங்க கூடிய வளையங்கள் போன்ற அமைப்பை பொருத்தியிருக்க வேண்டும். அதில் பத்து விதமான காய்கறிகளை பத்து தொட்டிகளில் பயிரிட்டு பயன்பெறலாம். இதை செங்குத்து தோட்டம் என்பார்கள்.

பயிர் பாதுகாப்பு
பொதுவாக இப்போது வீரிய பயிர் எதிர்ப்பு விதைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி நடுங்கள். பூச்சி தாக்குதல் அவ்வளவாக இருக்காது.
புழுக்கள் பயிர்களில் தென்பட்டால் அவற்றை கையால் எடுத்து அழிக்கவும். வேப்பெண்ணை, வேப்பங்கொட்டை சாறு வேப்பம் பிண்ணாக்கு சாறு கலந்து பயிர்களில் தெளித்தால் புழுக்கள் கட்டுப்படும்.

மருந்து தெளித்தால் பிறகு 10 நாட்களுக்கு காய்கறிகளை பறித்து பயன்படுத்தக் கூடாது. எந்த பயிருக்கு என்ன மருந்து பயன்படுத்தலாம் என்று உரம் பூச்சி மருந்து கடையில் கேட்டால் தருவார்கள். எல்லாவற்றும் மேலாக பஞ்சகவ்யா பயன்படுத்துவது நல்லது. பஞ்சகாவ்யா பயன்படுத்தி விளைவித்தால், இயற்கை விவசாய காய்கறிகளாக நீங்கள் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment