For Read Your Language click Translate

06 May 2014

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 02.

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 02.



செழித்து வளர்ந்த ஒரு வயல்வெளியைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் நடுவே நீங்கள் நிற்கும்போது, எங்கும் பசுமையாகப் பரவியிருக்கும் பயிர்களையே காண்பீர்கள். இடுப்பளவு பயிர் வளர்ந்திருக்கையில் சில மீட்டர் தூரத்திற்கு அப்பால், தரையில் இருக்கும் எதுவுமே உங்கள் கண்ணுக்குப் படமுடியாதவாறு எங்கும் வளர்ந்திருக்கும் பயிர். அந்த வயலில், ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவுக்கு மிகப்பெர...ிய வட்ட வடிவச் சித்திரம் வரையப்பட்டிருப்பதாக நினைத்துப் பாருங்கள்.உங்கள் கண்ணுக்கு அந்தச் சித்திரத்தின் முழுமை தெரிய வாய்ப்பே இல்லை என்பது புரியும். அப்படி அந்தச் சித்திரத்தின் முழுமையைப் பார்க்க வேண்டுமென்றால்,குறைந்தபட்சம் நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும். நூறு மீட்டர் மேலே பறந்து சென்று பார்த்தால் தெரியக் கூடிய நிலையில், கண்களின்மதிப்பீடுகளை மட்டும் வைத்து, பிரமாண்டமான சித்திரங்கள் வயல்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இதன் சாத்தியக்கூறுகளை யோசித்துப் பாருங்கள். பார்க்கவே முடியாத ஒன்றைத் தெளிவாக வரைவது என்பது சாத்தியம்தானா? ஆனால், உலகம் முழுவதும் 'க்ராப் சர்க்கிள்' (Crop Circle) என்ற பெயருடன், பயிர்களால் இப்படிப்பட்ட சித்திரங்கள் உருவாக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. வார்த்தைகளால் இதை நான் சொல்லும் போது, உங்களுக்குப் புரிவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறதல்லவா?

ஒரு பயிர் வட்டத்தை நிலத்திலிருந்து இரண்டு மீட்டர் உயரத்திலும், பத்து மீட்டர் உயரத்திலும் இருந்து பார்த்தால் நமக்கு அந்தச் சித்திரங்கள் எப்படித் தெரிகிறது என்று பாருங்கள். இதையே நிலத்தின் மட்டத்தில் இருந்து பார்த்தால் எந்த அளவுக்குத் தெரியும் என்பதையும் யோசியுங்கள். அப்படிப்பட்ட பெரிய சித்திரங்களை எப்படி நிலத்தில் இருந்தபடி உருவாக்கியிருக்க முடியும்?

உருவாக்கப்பட்ட சித்திரங்கள் மிகச் சாதாரணமான சித்திரங்கள் என்றால் கூடக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அவை அனைத்தும் கணித மேதைகளால்வரையப்படும் மிகச் சிக்கலான கேத்திர கணித வரைவுகளுக்கு ஒப்பான சித்திரங்கள். ஒரு காகிதத்தில் அப்படி ஒரு சித்திரத்தை நாம் வரைய வேண்டுமென்றால்,பல கணிப்பீடுகள் செய்து மட்டுமே வரைய முடியும். ஆனால் இவையெல்லாம் வயல் வெளிகளில், எந்த வித கணிப்புகளும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வாய் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க முடியாத கணித வரைவுகள் அவை. இதைச் சுலபமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தச் சித்திரங்களைப் பாருங்கள்.

http://3.bp.blogspot.com/-9RAvHM6r5x8/Uh967IFBC7I/AAAAAAAAAuw/tkMm0O8HQQo/s1600/Crop+Circle.JPG

ஒரு வட்டத்தின் நடுவே சிலந்திக் கூடு போன்ற அமைப்பில் பயிர்களால் வரையப்பட்ட ஒரு சித்திரம் இது. இந்தப் பயிர் வட்டத்தை வரைந்த விதமும், அதற்கான கணித விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஐந்து கோணங்களையுடைய நட்சத்திரங்கள் வரைந்து, அவற்றிற்கிடையே வட்டங்கள் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டிய சித்திரம் இது. ஆனால் அப்படி நட்சத்திரங்களோ, வட்டங்களோ வரையப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டு.சாதாரணமாகக் காகிதத்தில் வரைவதற்கே பல மணி நேரங்கள் எடுக்கக் கூடிய இந்தச் சித்திரம், வயல் வெளிகளில் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா? பயிர்களை நிலத்தோடு மடித்தும், அழுத்தியும் எந்த ஒரு பயிரும் சேதப்படுத்தப்படாமல் உருவாக்கப்பட்டிருகின்றது. கணித அடிப்படையில் மிகவும் சிக்கல் வாய்ந்ததாக, இது போலப் பல சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.அதற்கு உதாரணமாக இன்னுமொரு சித்திரத்தை விளக்கிவிட்டு, நான் மேலே சென்றால்தான், இந்த பயிர் வட்டங்களின் உண்மையான பரிமாணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள வைல்ட்ஷையரில், வூட்பெர்க் ஹில் என்னுமிடத்தில் (Woodberg Hill-Wildshire) 2000 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயிர்வட்டம் ஒன்றின் பெயர் சூரியகாந்தி (Sunflower). இந்தச் சூரியகாந்திப் பயிர் வட்டத்தில் 308 முக்கோணங்கள் உள்ளன. இவை 44 வளைவுக் கோடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.மிகவும் சிக்கலான அமைப்பையுடைய இந்தச் சித்திரத்தைக் கணித முறையில் எப்படி வரைவது என்பதைப் பாருங்கள். அதுவே பயிர்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தையும் பாருங்கள். நம்பவே முடியாத ஆச்சரியமாக, நிஜத்தில் எம் கண்முன்னே பரந்து விரிந்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட சித்திரங்களைப் பயிர்களினால் எப்படி வரைய முடியும்? எத்தனை நபர்கள் இதை உருவாக்கத் தேவைப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை நாட்கள் இவற்றிற்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும்? அனைத்துக் கேள்விகளையும் தன்னுள்ளே அடக்கி அமைதியாய் வயல்வெளியில் படுத்திருக்கிறது இது.

http://2.bp.blogspot.com/-OB1GqWPYLNk/Uh97gutOaAI/AAAAAAAAAu4/H2z-lC5wDnc/s1600/Crop+Circle.JPG

ஒரு அளவுக்குப் பயிர் வட்டங்களின் பிரமாண்டங்களையும், பரிமாணங்களையும் நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே, பயிர் வட்டங்கள் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டிய இடத்திற்கு இப்போது வந்திருக்கிறேன்.

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போமா..?

எழுதியவர்.. பதிவர் ராஜ்சிவா அவர்கள்

No comments:

Post a Comment